கால அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆகஸ்ட் மாதம் வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக ரயில்சேவை ரத்து செய்யப்பட்டது. இதைதொடர்ந்து, புலப்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக மட்டும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில், 200 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதைதொடர்ந்து, ஜூலை மாதத்திற்குள் ரயில்சேவை முழுமையாக தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், நாடு முழுவதும் இயக்கப்படும் பயணிகள் மற்றும் விரைவு ரயில்கள் வரும் 12.08.2020 அன்று வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, எக்ஸ்பிரஸ், பயணிகள் ரயில், புறநகர் ரயில்கள் சேவை வரை ரத்து செய்யப்படுகின்றன. நகரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 12 வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துக்கு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட காலங்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்களை ரத்து செய்து முழு தொகையும் திருப்பி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், நாடு முழுவதும் இயங்கி வந்த 3,500 முன்பதிவு ரயில்கள், 4,600 முன்பதிவில்லா ரயில்கள், 5,000 மின்சார ரயில்கள் என மொத்தம் 13,100 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. அதேநேரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் இருக்காது எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.