சொந்த ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடியில் ‘கரீப் கல்யாண் ரோஜ்கார்’ வேலைவாய்ப்பு திட்டத்தை இன்று நிர்மலா சீதாராமன் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ஊரடங்கால் பல புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். பொருளாதார வீழ்ச்சியால் அவர்களுக்கு வேலை பறிபோகும் சூழல் உருவாகுமோ என்ற அச்சத்தில் பலரும் உள்ளனர். அவர்களுக்கு அவர்கள் சொந்த ஊரிலேயே திறமைக்கேற்ற வேலை கொடுக்க மத்திய அரசு அதிரடி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்று புது டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.50 ஆயிரம் கோடி மதிப்பிலான ‘கரீப் கல்யாண் ரோஜ்கார்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இதனடிப்படையில் விவசாயம், அடிப்படை உள்கட்டமைப்பு போன்ற பணிகளில் அந்தந்த ஊர் மக்களை அதே ஊரிலேயே பணியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை மத்திய மாநில அரசுகள் இணைத்து சரி செய்ய உள்ளதாகவும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தர திட்டமிட்டிருப்பதாவும் தெரிவித்துள்ளார்.