பத்து நிமிடங்களில் இலவசமாக பான் கார்டு எண் பெறும் வகையில், புதிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் அறிவித்தபடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆதார் அட்டையை கொண்டு பான் கார்டை உடனடியாக பெறுவதற்கான வசதியை அறிமுகப்படுத்தி உள்ளார். சரியான ஆதார் எண்ணை வைத்திருக்கும் மற்றும் ஆதார் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணைக் கொண்டவர்கள் இத்திட்டத்தின் மூலம் பான் கார்டு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்காக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடிப்படையிலான இ- கே.ஒய்.சி மூலம் உடனடி பான் வசதி பெறும் முறை
கடந்த பிப்ரவரி முதல் வருமான வரித் துறையின் மின்-தாக்கல் இணையதளத்தில் சோதனை முறையில் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது இம்முறை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இம்முறை மூலம் பான் கார்டு பெறுவதற்கு, வருமான வரித் துறையின் மின்-தாக்கல் (e-filing website) வலைதளத்திற்குச் சென்று, உங்கள் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP ஐ அந்த இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த செயல்முறை முடிந்ததும், 15 இலக்க ஒப்புதல் எண் (acknowledgment number) ஒன்று உருவாக்கப்பட்டு விண்ணப்பிப்பவருக்கு வழங்கப்படும். இந்த எண்ணை பயன்படுத்தி இ-பான் கார்டை அதே தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். மேலும், ஆதார் அட்டையுடன் ஈமெயில் முகவரி பதிவு செய்யப்பட்டிருந்தால், ஈமெயில் மூலமாக விண்ணப்பதாரருக்கு இ-பான் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.