கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளை ஜூலை 31-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

அன்லாக் 2.0 அறிவிப்பின்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும், குறைவான பகுதிகளில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்
- நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் ஜூலை 31 வரை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன், தொலைதூரக் கல்வி வகுப்புகள் நடத்தலாம்.
- நாடு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி நிறுவனங்கள், கலாச்சார மற்றும் மத ரீதியான அமைப்புகள் திறக்க ஜூலை 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
- வந்தேபாரத் மிஷன் தவிர மற்ற வெளிநாட்டு விமான பயணங்களுக்கு தடை
- மெட்ரோ ரயில் சேவைக்கு தடை நீட்டிப்பு
- சினிமா, உடற்பயிற்சிகூடம், நீச்சல் குளம், பூங்கா உள்ளிட்ட பொழுது போக்கு மற்றும் பயிற்சி பகுதிகள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
- அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மத, கலாச்சார நிகழ்ச்சிகள், கூட்டங்களுக்கு தடை
- உள்ளூர் விமானப் போக்குவரத்துக்கு ஏற்கெனவே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக சேவை வழங்கும் வகையில் உள்நாட்டு விமான போக்குவரத்து தொடரும்.
- இரவு நேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும். இரவு 10 மணி முதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு அமலில் இருக்க வேண்டும்.
- கொரோனாவை கட்டுப்படுத்த ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள வழிகாட்டும் நெறிமுறைகள் அனைத்தும் இதற்கும் பொருந்தும். அதனை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
- கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் ஜூலை 31-ம் தேதி வரை ஊரடங்கு முழு அளவில் பின்பற்றப்பட வேண்டும்.
- கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மக்களின் நடமாட்டத்தை கூடுமான வரையில் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும்.
- மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு இடையேயும் சரக்கு போக்குவரத்திற்கு எந்த தடையும் இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.