ஜம்மு காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎஃப் படைகள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபூர் பகுதியில் இன்று காலை சிஆர்பிஎஃப் வீரர்கள் வழக்கமான ரோந்து பகுதியில் ஈடுபட்டிருந்த்னர். ஸ்ரீநகர் காவல்நிலையத்தில் இருந்து 50 கி.மீ தொலைவில் தீவிரவாதிகள், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ஒரு சிஆர்பிஎஃப் வீரர் வீரமரணம் அடைந்தார். மேலும் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீவிரவாத தாக்குதலில், தனது குழந்தைகளுடன் காரில் இருந்த பொதுமக்கள் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து சிஆர்பிஎஃப் வீரர்களும் பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். ஆனாலும் தீவிரவாதிகள் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிய ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பக் சிங், சோபோரில் சிஆர்பிஎஃப் படையினர் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.