மாநில அரசு கவனிக்க ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

கடந்த பிப்ரவரி மாதம் கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட திமுக அமைச்சர் செயலலாளர் ஆர்.எஸ் பாரதி பட்டியலினத்தவர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவருக்கு எதிராக, சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்த, கடந்த மாதம் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஆர்.எஸ் பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் கடந்த 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜரான அவருக்கு சென்னை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை எதிர்த்து மத்திய குற்றப்பிரிவு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடும் நிபந்தனைகள் இன்றி ஆர்.எஸ். பாரதிக்கு, அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது எனவும், தொற்று பரவலைக் காரணம் காட்டி ஜாமீன் வழங்க முடியாது என்றும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு கவனிக்க ஏராளமான விஷயங்கள் உள்ள நிலையில், ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய காவல்துறை அதிக ஆர்வம் காட்டுவது ஏன் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மனு மீதான விசாரணைய ஜூன் 19க்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.