லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் அரசு அலட்சியம் காட்டுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 2 மாதங்களுக்கு தள்ளி வைக்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு இன்று நீதிபதி வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர்களுக்கு தேவையான அனைத்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் ஏற்கனவே தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டதால், மீண்டும் தள்ளிவைக்க முடியாது என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஆனால் அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ஜூன் 15ம் தேதி நடத்த அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை விட, அவர்களின் உயிர் மிகவும் முக்கியம் என்றும், 9 லட்சம் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் நீதிபதிகள் கூறினர்.
9 லட்சம் மாணவர்களில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று ஏற்படாதா என்றும் கேள்வி எழுப்பினர். ஊரடங்கு காலத்தில் தேர்வை நடத்துவதில் அரசு அவசரம் காட்டுவது ஏன் எனவும், லட்சக்கணக்கான மாணவர்கள் நலனில் அரசு அலட்சியம் காட்டுவது ஏன் எனவும் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர். எனவே தேர்வை 1 மாதத்திற்கு ஒத்தி வைத்து, ஜூலை 2-வது வாரத்தில் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு இன்று மதியத்திற்கு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.