சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று புதிதாக 1,392 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 25,937ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,927 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து வந்த 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,897 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மருத்துவ கல்லூரியை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது; நோயாளிகள் அதிகரிப்பு குறித்து மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. ஆனால் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். கொரோனா நோயாளிகளை கவனமுடன் அரசு கையாண்டு வருகிறது எனவும் கூறினார். சேலம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிக அளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் ஆரம்ப நிலையில் நோயை கண்டறிய முடிகிறது எனவும் கூறினார்.

வெளியில் இருந்து சேலம் வந்த 263 கொரோனா நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை இல்லாமல் இன்று தான் தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை முறைகளை கடைபிடிக்கிறோம். சாதாரண சளி, இருமல் இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளவேண்டும். சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசுதான் அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.