
சென்னையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பின் காரணமாக முழு ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்ட நிலையிலும் தேவையின்றி சுற்றித்திரிந்த 2436 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உலக நாடுகளையே அச்சுறுத்தலுக்கு ஆளாகிவரும் கொரோனாவின் பாதிப்பு சென்னை மக்களை ஆட்டிப்படைத்துவருகிறது. இதுவரை 54 ஆயிரத்து 449 பேர் தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 38 ஆயிரத்து 327 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வாரங்களில் சென்னையில் மட்டும் தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கடுமையான ஊரடங்கினை அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று முதல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஏற்கனவே சென்ற முறை அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியதன் காரணமாக தான் ஊரடங்கினை மதிக்கவில்லை எனவும், இந்த முறை கடுமையாக ஊரடங்கு இருக்கும் என காவல்துறை உயரதிகாரிகள் எச்சரிக்கையும் விடுத்திருந்தனர்.

ஆனால் கொரோனா பாதிப்பின் வீரியத்தினை உணரவில்லை, போலீசாரின் எச்சரிக்கையினையும் மதிக்காமல் தேவையின்றி வெளியில் மக்கள் சுற்றி திரிந்து தான் வருகின்றனர். இதன் காரணமாக போலீசார் இன்று மட்டும் 2436 பேர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் தனிமனித இடைவெளியினை பின்பற்றாதவர்கள் என 989 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கினை முழுமையாக பின்பற்றாத இருசக்கர வாகனங்கள் 1883 ம், 87 மூன்று சக்கர வாகனங்கள், 47 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1997 வாகனங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.