திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலனை திருப்திப்படுத்த கர்ப்பம் என பொய் கூறி, மருத்துவமனையில் இருந்து கைக்குழந்தையை கடத்திய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

சிங்காரப்பேட்டை மொசலிக்கொட்டாய் என்ற கிராமத்தை சேர்ந்த தம்பதி ஷெரீப் – ரோசின் சுல்தானா. இரு தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 3வது சபிரசவத்துக்க்காக அனுமதிக்கப்பட்ட சுல்தானாவிற்கு ஆண்குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில், பர்தா அணிந்த பெண் ஒருவர் சுல்தானா இருந்த அந்த பிரசவ வார்டுக்குள் வந்துள்ளார்.
சுல்தானாவிடம் பேச்சு கொடுத்த அந்தப் பெண், தன்னுடைய அக்காவையும் அதே வார்டில் அனுமதித்துள்ளதாகவும், அக்காவுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாகவும் கூறியுள்ளார். பிறகு “என் அக்காவுக்கு ஆண் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும், ஆனா பெண் குழந்தை பிறந்திருக்கு. உங்களுடைய குழந்தையை கொஞ்ச நேரம் கொடுத்தா, என் அக்காகிட்ட காட்டிட்டு உடனே தூக்கிட்டு வந்துடறேன்” என கூற, சுல்தானாவும் அவரை நம்பி குழந்தையை கொடுத்துள்ளார் ஆனால் ரொம்ப நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால், சுல்தானா அங்கிருந்த மருத்துவர்களிடம் விஷயத்தை சொல்லி அழுதுள்ளார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் திருப்பத்தூர் நகர போலீஸில் புகார் தரவும், அவர்கள் விரைந்து வந்து அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில் பர்தா போட்ட பெண், குழந்தையை தூக்கி கொண்டு வெளியேறுவது பதிவாகி இருந்தது. மேலும் அந்த பெண்ணின் முகம் வீடியோவில் தெளிவாக தெரியவும், விசாரணைக்கு அது பெரிதும் உதவியுள்ளது.
இதையடுத்து, அந்த பெண் திருப்பத்தூர் தேவாங்கர் நகரை சேர்ந்த நஹனா என்பதும், 25 வயது என்பதும் தெரிந்தது. உடனடியாக, அவரது வீட்டுக்கு சென்று போலீசார் தேடியதில் துணிகளுக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தொடர்ந்து, போலீசார் நஹனாவை கைது செய்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்ததுள்ளது. அப்போது அவர் சொன்னதாவது: “நான் ஒருத்தரை காதலித்தேன்.. கல்யாணமும் செய்து கொண்டேன். 2 வருஷத்துக்கு முன்னாடி எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. அதனால் நான் அவரை பிரிந்து வந்துவிட்டேன். என் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் இன்னொருவருடன் உறவு ஏற்பட்டது. ஒரே வீட்டில்தான் வாழ்ந்து வருகிறோம்.
நான் கர்ப்பமாகவில்லை என்பதற்காக என்னுடன் அவர் சண்டை போட்டுக் கொண்டே இருந்தார். அதனால் ஏதாவது குழந்தையை கடத்தி, அவருக்கு தான் அந்த குழந்தை பிறந்தது என்று நம்பவைத்தால், கல்யாணம் செய்து கொள்வார் என்று பிளான் செய்தேன்.
அவரை 6 மாசமாக கர்ப்பமானதுபோல நடித்து ஏமாற்றினேன். பிறகு பிரசவ வலி வந்துவிட்டதாக சொல்லி மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். அப்பதான் இந்த குழந்தையை பார்த்தேன். பிறந்து 2 நாள் ஆகவும், இதையே கடத்தி கொண்டு போகலாம் என முடிவு செய்தேன்” என தெரிவித்துள்ளார்.