கால்வான் பள்ளத்தாக்கு முழுவதும் தங்களுக்கு சொந்தமானது என வரலாற்று ஆதாரங்களை காட்டி, உரிமை கோர தொடங்கி உள்ளது சீனா.

இந்தியா – சீனா இடையே எல்லைப்பகுதியில் கடந்த இரு மாதங்களாக நீடித்து வரும் மோதலானது, கடந்த 15ம் தேதி கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பால் உச்சம் பெற்றுள்ளது. குறிப்பிட்ட பகுதியை தங்களுக்கு உரித்தானது என சீன உரிமை கோருவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
பெரும்பாலான சீன வரைபடங்கள் கல்வான் நதியின் அனைத்துப் பகுதியும் சீனாவுக்கு உரியது போன்றே காட்டுகிறது. ஆனால் முந்தைய வரைபடங்களில் நதியின் மேற்குக் கரையோரம் அதாவது ஷ்யோக் நதியைச் சந்திக்கும் இடம் சீனாவின் பகுதியுடன் சேர்த்துக் காட்டப்படவில்லை.
இந்நிலையில் சீன சமூக அறிவியல் அகாடமியைச் சேர்ந்த எல்லைகள் விவகார நிபுணர் ஸாங் யோங்பான் என்பவர் அரசு ஊடகத்தில் வரலாற்று ஆதாரங்களைக் காட்டி ஒட்டுமொத்த கல்வான் பகுதியும் சீனாவுக்குரியதே என்று பேட்டியளித்துள்ளார்.

“குவிங் பேரரசின் (1644-1911) பலதரப்பட்ட ஆதாரங்களும், மேற்கத்திய இலக்கியமும் கல்வான் பள்ளத்தாக்கு முழுவதையும் சீனாவின் பகுதி என்று கூறுகிறது. எனவே வரலாற்று உரிமை என்ற கொள்கையின் அடிப்படையில் அது சீனாவுக்கு உரியது” என்று அரசு ஊடகமான குளோபல் டைம்ஸில் கூறியுள்ளார்.
மேலும், ஷ்யோக் நதிப்பகுதியில் இந்தியக் கட்டுமானங்களை சீன பகுதிக்குள்ளான பிரவேசம் என்று வர்ணிக்கிறார் ஸாங் யோங்பான். ஷ்யோக் நதிக்கு அருகில் இந்தியா விமான நிலையம், பாலங்கள், சாலைகள், கிரமாங்களை அமைத்து, ஆண்டுக்கணக்காக சீன பிராந்தியத்துக்குள் இந்தியா ஊடுருவியுள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதை வைத்துத்தான் சீனா கல்வான் பகுதிக்கு உரிமை கொண்டாடி வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம் சீனாவின் இந்த கோரிக்கையை பெரிதும் கண்டுகொள்ளாமல் ஆதாரமற்றது என விமர்சித்துள்ளது.

கல்வான் – ஷ்யோக் நதிகள் சங்கமிக்கும் கிழக்குப்பகுதியில்தான் கட்டுப்பாட்டு எல்லைக்கோடு உள்ளது, திங்கள் நடைபெற்ற மோதல் இந்தப்பகுதிக்கும் கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஏற்பட்டது. அதாவது எல்லையில் இந்தியப் பகுதிக்குள் மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் கட்டுமானங்கள் இந்தியப் பகுதியில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.