லடாக் மோதலில் நடந்த உண்மையை சீனா மறைப்ப்பதாக மத்திய அமைச்சர் வி.கே சிங் குற்றச்சாட்டி உள்ளார்.

இந்திய – சீன எல்லையான லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில், கடந்த 15-ம் தேதி, இரு நாட்டு ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல்களில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த மோதலில் 35 க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தங்கள் நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு குறித்தோ உயிரிழப்பு குறித்தோ சீனா அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.
இந்நிலையில் லடாக் மோதல் குறித்து மத்திய அமைச்சர் வி.கே. சிங் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர் “ நமது நாடு 20 ராணுவ வீரர்களை இழந்திருக்கின்றது. ஆனால் சீனா தரப்பில், அது இருமடங்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் தரப்பில் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் தங்கள் தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை சீனாமறைக்கிறது. 1962 போரிலும் சீனா தரப்பில் ஏற்பட்ட பாதிப்புகளை அந்நாடு ஏற்கவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னதாக லடாக் மோதல் குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இந்திய எல்லைக்குள் யாரும் ஊடுருவவில்லை எனவும், இந்திய நிலைகளை யாரும் கைப்பற்றவில்லை என்றும் மோடி தெரிவித்தார். இதுகுறித்து எதிர்க்கட்சிக்ள் கேள்வி எழுப்பிய நிலையில், பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்தது.
எல்லையில் நடந்த சண்டைக்கு பிறகு இந்திய பகுதிக்குள் சீன அத்துமீறல் இல்லை என்று தான் மோடி தெரிவித்தார் எனவும், மோடி பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.