பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அவரது மனைவி மேக்னா ராஜின் வீடியோ காண்போரை கலங்க வைக்கிறது.

பிரபல கன்னட நடிகரும், நடிகர் அர்ஜூனின் சகோதரி மகனுமான சிரஞ்சீவி சர்ஜா, வாயுபுத்ரா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். 20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர், கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ் என்ற நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். மேக்னாராஜ், தமிழில், காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சிரஞ்சீவி சர்ஜா நேற்று முன் தினம் மதியம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 39. அவரின் மறைவு கன்னட திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனால் சமூக வலைதளங்கள் பல பிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நேற்று அவரின் இறுதிச்சடங்கு பெங்களூருவில் உள்ள அவரது சகோதரரான துருவாவின் வீட்டில் நடைபெற்றது.
அவரது இறுதிச்சடங்கில் ஷிவ்ராஜ் குமார், ராகவேந்திரா ராஜ்குமார், புனீத் ராஜ்குமார், சுதீப், தர்ஷன், யாஷ், பிரஜ்வால் தேவ்ராஜ், சேத்தன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதேபோல முதலமைச்சர் எடியூராப்பா, முன்னாள் முதல்வர் சித்தராமையா, மற்றும் அரசியல் தலைவர்களான,
ஹெச்.டி குமாரசாமி, டி.கே சிவக்குமார் ஆகியோரும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச் சடங்கின் போது அவரின் மனைவி கதறியழும் வீடியோ வெளியாகி உள்ளது. தனது கணவரின் உடல் மீது சாய்ந்து கொண்டு அவர் அழும் காட்சிகள் காண்போரை கலங்க வைக்கின்றன. அருகிலிருந்தவர்கள் அவரை தேற்றி ஆறுதல் கூறுகின்றனர்.
இதனிடையே அவரது மனைவி மேக்னா, தற்போது 4 மாத கர்ப்பமாக உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த தகவலை விரைவில் வெளியிட இருந்ததாதகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்குள்ளாகவே சிரஞ்சீவி இறந்துவிட்டார் என்பதே இதில் வேதனையான உண்மை..