’வெயில்’ படத்திற்குப் பிறகு நடிகர் பரத் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷங்கரின் உதவி இயக்குநரான வசந்தபாலன் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்கி வெளிவந்த திரைப்படம் ‘வெயில்’. தமிழில் சிறந்தப் படம் என்ற தேசிய விருதைப் பெற்ற இப்படத்தில், பசுபதி, பரத், பாவனா, பிரியங்கா நாயர், ஸ்ரேயா ரெட்டி, ரவி மரியா, ஜி.எம். குமார், சாம்ஸ், டி.கே.கலா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். எளிமையாக எடுக்கப்பட்டிருந்தாலும் வித்தியாசமான கதை மற்றும் திரைக்கதையால் ரசிகர்களை இந்தப் படம் கவர்ந்திருந்தது. மேலும், இந்தப் படத்தின் மூலம்தான் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனான ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார். அறிமுகப்படத்திலேயே பின்னணி இசை மற்றும் பாடல்களால் பிரபலமான இசையமைப்பாளராக மாறினார் ஜி.வி.பிரகாஷ் குமார். நா.முத்துக்குமாரின் பாடல் வரிகளும், ஆர்.மதியின் ஒளிப்பதிவும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்தது. ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்திருந்தது.
இந்நிலையில், சுமார் 16 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் வசந்தபாலனுடன் இணைந்துள்ளதாக நடிகர் பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இயக்குநர் வசந்தபாலனின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ‘ஜெயில்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது வெப் சீரிஸ் ஒன்றை இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், இயக்குநர் ஷங்கரின் ‘இந்தியன் 2’ படத்தில் இணை இயக்குநராக மீண்டும் இணைந்துள்ளார் வசந்தபாலன். புதியப் படத்தில் இணைகின்றனரா அல்லது வெப் சீரிஸில் பரத் மற்றும் இயக்குநர் வசந்தபாலன் கூட்டணி இணைகின்றதா என்ற அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.