மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தாவுக்கு தற்போது ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைத்துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருப்பவர் நடிகை சமந்தா. அழகான தோற்றத்தாலும், சீரிய நடிப்பாலும் சினிமா ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். சமீப காலமாகவே சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இல்லாமல் இருந்த இவர், தான் அரிய வகை தசை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிக்சைப் பெற்று வரும் போதே யசோதா படத்துக்கான பின்னணி குரல் கொடுக்கும் பணியில் ஈடுப்பட்டார்.
பின்னர் ஒருசில நேர்காணல்களில் பங்கேற்று பேசிய சமந்தா, ரசிகர்களின் அன்பினாலும், வேண்டுதல்களாலும் மட்டுமே கடினமாக காலத்தை கடந்து வந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். அடுத்தடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால், அவரின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அவரின் உடல்நிலை முன்னேறி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், சமந்தாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை முறையால் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.