வீரயுக நாயகன் வேள்பாரி என்ற வரலாற்று புனைவு நாவலை இயக்குநர் ஷங்கர் திரைப்படமாக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கதாநாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வார இதழ் ஒன்றில் தொடராக வெளிவந்து ரசிகர்களிடையே பேராதரவு பெற்ற நாவல் வேள்பாரி. இதனை, மதுரை எம்பியும், சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளருமான சு. வெங்கடேசன் எழுதியிருந்தார். பறம்பு மலையை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னர் வேள்பாரி, கடையேழு வள்ளல்களில் ஒருவராக சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். இவரின் கதையை தான், தற்போது இயக்குநர் ஷங்கர் எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில், பாரி கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக தெரிகிறது.
பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கனவே, மதுரையில் நடந்த கார்த்தியின் ‘விருமன்’ திரைப்பட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, எழுத்தாளர் சு.வெங்கடேசனுடன் ஒரு சுவாரஸ்ய பயணம் ஆரம்பித்து விட்டதாகவும், விரைவில் அது குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார். அந்த விழாவில் எழுத்தாளர் சு.வெங்கடேசனும் கலந்துகொண்டிருந்தார். மேலும், நடிகர் தனுஷ் கடந்த 2019ஆம் ஆண்டே ‘வேள்பாரி’ கதையால் ஈர்க்கப்பட்டு, அதனை திரைப்படமாக எடுக்க திட்டமிட்டதாகவும் செய்திகள் உலா வந்தன.
ஆனால், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில்தான், தற்போது சூர்யா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சிறுத்தை சிவா உடன் நடிகர் சூர்யா இணைந்துள்ள திரைப்படமும் சரித்திர படம் போன்ற தோற்றத்தை மோஷன் போஸ்டர் கொடுத்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது