கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநரான பாரதிராஜா நீர்சத்து குறைபாடு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், “பாரதிராஜாவிற்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடல்நிலை சீராக உள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்” என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் இனிய தமிழ் மக்களே. வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான், மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. என்னை நேரில் காண வர வேண்டாம் என்று என் மேல் அன்பு கொண்ட அனைவரையும் பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்.
விரைவில் பூரண நலம் பெற்று உங்கள் அனைவரையும் நேரில் சந்திக்கிறேன். மருத்துவமனையில் நான் அனுமதிக்கப்பட்ட செய்தியை அறிந்தவுடன் நேரிலும், தொலைபேசியிலும், இணையதளம் மூலமும் அன்புடன் விசாரித்த மற்றும் நலம் பெற பிரார்த்தித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் சந்திப்போம். அன்புடன், பாரதிராஜா” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.