
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 8 வது நாளாக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துவதால் சாமானிய மக்கள் பெரும் பாதிப்பினை சந்தித்துவருகின்றனர்.
கொரோனா நோய்த்தொற்று பரவலால் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால், கச்சா எண்ணெய் விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையில் கடந்த மாா்ச் 16ம் தேதி முதல் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரே விலையிலேயே நீடித்து வந்தது.

இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல தளா்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், 82 நாள்களுக்குப் பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் நடைமுறையை கடந்த 7ம் தேதி முதல் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்த தொடங்கிவிட்டனர்.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 54 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயா்வு காரணமாக, சென்னையில் பெட்ரோல் லிட்டா் ரூ. 78.99 என்ற அளவிலிருந்து ரூ. 79.53-ஆக இன்று உயர்த்தப்பட்டது. அதேபோல டீசல் விலை லிட்டருக்கு ரூ. 71.64 என்ற அளவிலிருந்து ரூ. 72.18-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போது பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.மேலும் மோடி அரசு சாமானிய மக்களுக்கான அரசு இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர் குற்றச்சாட்டினை முன்வைத்துவருகின்றனர்.