
மதுரை: மதுரை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் 10 பறக்கும் படைகளை அமைத்து மாவட்ட ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு அடுத்தாற்போல் மதுரையில் தான் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துவருகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலிருந்து மதுரைக்கு கடந்த வாரங்களில் இ-பாஸ் அனுமதியோடு 20 ஆயிரம் பேர் வந்துள்ளனர் எனவும், அனுமதியில்லாமல் பலர் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளிமாவட்டங்களிலிருந்து வரும் மக்களை கண்காணிக்க மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் மதுரையில் தேவையின்றி முககவசம், தனி மனித இடைவெளியினை பின்பற்றாமல் இருப்பவர்கள், வணிக நிறுவனங்களில் மீறப்படும் சமூக இடைவெளி போன்றவற்றை கண்காணிக்கும் விதமாக காவல், வருவாய், மாநகராட்சி அலுவலர்கள் கொண்ட 10 பறக்கும் படையை அமைத்து ஆட்சியர் வினய் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே மார்கெட்டில் 4 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து கோயம்பேடு சந்தை போன்று மதுரை மாவட்டத்தில் உள்ள சந்தைகள் மாறிவிடுமோ? என்ற அச்சத்தில் மதுரை பழமார்க்கெட்டினை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.