
சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகளை கவனிக்கவும், மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கவும் பொது இடங்களுக்கு சென்றுவரும் அமைச்சர்கள் தற்போது கொரோனா பயத்தால் பரிசோதனை செய்து விட்டு, வீட்டு தனிமையில் இருப்பதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக சுகாதாரத்துறை பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல், வருமானமின்றி தவித்து வந்த மக்களுக்காக நிவாரணப்பொருட்களை அவர்களது இடத்திற்கே சென்று அரசியல் கட்சியின் வழங்கிவருகின்றனர்.

இந்த நிலையில் தான் தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ச்சியாக ஸ்ரீபெரும்புதூர் அதிமுக எம்.எல்.ஏ மனைவி மற்றும் ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதே போல் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக அமைச்சர்கள், கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என உறுதியாகியுள்ள போதும் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படி இக்கட்டான சூழலில் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு காரில் பயணிக்கும் அமைச்சர்களுக்கு, மக்களுக்கு வழங்கப்படுவது போல முறையான இ-பாஸ் அனுமதியும் இல்லை. எப்போது வர நினைக்கிறார்களோ? அப்படி சொந்த ஊருக்கு திரும்பி மக்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்குவது தற்போது மக்களிடையே பெரும் பயத்தினை ஏற்படுத்தியுள்ளது.