அரசு மருத்துவமனையின் அலட்சயத்தால் கொரோனா நோயாளி மரணமடைந்ததாக, அவர் பேசிய ஆடியோவை அவரது உறவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

கேரள மாநிலம், கண்ணூர் அருகே மட்டனூரில் கலால் துறையில் ஒட்டுநராக பணிபுரிந்தவர் சுனில் குமார். 28 வயதான இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டார். அப்பகுதியில் இருந்த அரசு மருத்துவமனையில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டில், சிகிச்சை பெற்றுவந்தார். அவரின் உடல்நிலை மோசமானதை அடுத்து,வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் கடந்த வாரம் உயிரிழந்தார்.
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் அலட்சியமாக நடந்துகொண்டதால் தான், சுனில் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக சுனில் பேசியிருந்த ஆடியோவையும் அவர் வெளியிட்டுள்ளனர். அந்த ஆடியோவில் “ எனக்கு மூச்சுவிட சிரமமாக இருக்கிறது. இதன் தீவிரம் யாருக்கும் புரியவில்லை. செவிலியர்கள் எதுவும் செய்யவில்லை. விரைவில் யாரையாவது வரச் சொல்லுங்கள்” என்று பேசியுள்ளார்.

அதிக காய்ச்சல் காரணமாக, சுனில் முதலில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டதால், அவரை அரசு மருத்துவக் கல்லூரி சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அரசு மருத்துவனையின் அலட்சியமே சுனிலின் உயிரிழப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனினும் மருத்துவ கல்லூரி நிர்வாகம் அதனை மறுத்து வரும் நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.