கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுவதாகாவும், உடல்கள் குப்பை தொட்டியில் வீசப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வானி குமார், கொரோனா நோயாளிகள் மோசமாக நடத்தப்படுவது குறித்து உச்சநீதிமன்ற தலமை நீதிபதி எஸ்.ஏ பாப்தேவிற்கு கடிதம் ஒன்று எழுதினார். மேலும், கொரோனாவால் மரணமடையும் நபர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் எனவும் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள், அசோக் பூஷன், எஸ்.கே கவுல், எம்.ஆர் ஷா ஆகியோர் முன்பு இன்று விசாராணைக்கு வந்தது.
அப்போது டெல்லி அரசுக்கு சில காட்டமான கேள்விகளை நீதிபதிகள் முன்வைத்தனர். மேலும் “ பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர்.கொரோனா காரணமாக உயிரிழந்தவர்ளின் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படுவதை கூட பார்க்க முடிகிறது. உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளை கவனிக்கக்கூட யாரும் இல்லை.

மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள், ,கொரோனா பரிசோதனை 16,000-ல் இருந்து 17,000-ஆக அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் மட்டும் பரிசோதனை அளவு குறைக்கப்பட என்ன காரணம் ? டெல்லியில் தினமும் 7 ஆயிரமாக இருந்த பரிசோதனை 5 ஆயிரமாகக் குறைக்க்கப்படது ஏன்..?
கொரோனா வைரஸைத் தடுப்பது குறித்து மத்திய அரசு வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை டெல்லியில் மாநில அரசு கடைப்பிடிக்கவில்லை. டெல்லியில் உள்ள மருத்துமனை நிலவரத்தைச் சொல்லவே வருத்தமாக இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உயிரிழந்தவர்களின் உடலைக் கையாளுதல் போன்றவை வேதனையளிக்கின்றன.
கொரோனாவால் ஒரு நோயாளி இறந்துவிட்டால், அவரின் இறப்பு குறித்து அவரின் குடும்பத்தினருக்கு கூட தகவல் சொல்லப்படுவதில்லை. இன்னும் சில நோயாளிகளின் இறுதிச் சடங்கில் கூட உறவினர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவதில்லை.

டெல்லியில் மட்டுமல்ல மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் கூட மோசமான நிலைதான் நிலவுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் எந்த அளவுக்கு உள்ளன, மருத்துவ ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு இருக்கிறதா என்பதை விளக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தனர்.