தமிழகத்தில் கொரானா பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரானா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது. தமிழகத்தில், ஆரம்பகட்டத்தில் இரட்டை இலக்க எண்களில் நாள்தோறும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்பு திடீரென நாள்தோறும் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதியானது.
அதிகரித்த நோய்த்தொற்றுக்கு முதலில் டெல்லி மாநாடு காரணமாக கூறப்பட்டு வந்தது. அதைத்தொடர்ந்து, இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் அதிக அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதால் அதிக அளவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுகிறது. இது நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஒரு நேர்மறையான முயற்சி என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறையாதது அரசு காரணங்கள் கூறிய காரணங்கள் மீது சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
உதாரணமாக, கடந்த 7ம் தேதி 16,275 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 1515 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது. 8ம் தேதி 14, 982 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் 1,562 பெருக்கும், நேற்று 13, 219 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 1, 685 பெருக்கும் கொரானா தொற்று உறுதியாகியுள்ளது. பரிசோதனை மாதிரிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் குறைந்தாலும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்து, அரசு தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை, பரிசோதனைகள் குறைக்கப்பட்டாலும் நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது அரசு வெளிப்படைதன்மை இன்றி செயல்படுகிறதோ என்ற எண்ணத்தையே அளிக்கிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் கொரானா தொற்றுக்கு சிகிச்சை அளித்து வந்ததில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 30 வயது மருத்துவர் ஒருவர் வேறு எந்த ஒரு உடல்நல குறைவும் இன்றி நேற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நோய்த்தொற்று பரவ தொடங்கிய ஆரம்ப கட்டத்தில், கொங்கு மண்டலத்திலேயே அதிக அளவு கொரானா பரவல் காணப்பட்டது. ஆனால், திடீரென அப்பகுதிகளில் நோய்த்தொற்று பரவல் குறைந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய வட மாவட்டங்களில் மட்டுமே தற்போது அதிகளவில் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இதற்கு, கொங்கு மண்டலத்தில் தங்களுக்கு உள்ள வாக்கு சதவிகிதத்தை இழக்க கூடாது என, அவற்றை மேம்பட்ட பகுதிகளாக காட்ட ஆளும் அதிமுக அரசு அங்கு பரிசோதனைகளை குறைத்ததே காரணம் எனக் கூறபடுகிறது. மேலும், கொரானா உயிரிழப்புகள் குறைத்து காட்டப்படுவதாகவும் தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓருவேளை தமிழகத்தில் கொரானா தொற்று சமூக பரவலாக மாறி விட்டது என்பது உண்மை ஆயின் அரசியல் லாபங்களுக்காக அதனை மறைக்காமல், அரசு மக்களிடம் வெளிப்படையாக அதனை விளக்கி அதற்கு தகுந்தாற் போல் அவர்களை தயார்படுத்துவதே சரியான முடிவாகும்.