கொரோனா உறுதியானால் என்ன செய்வது என்பது குறித்தும், மருத்துவமனைக்கு என்னென்ன கொண்டு செல்லலாம் என்பது பற்றியும் பார்க்கலாம்..

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை மத்திய மாநில அரசுகள் விதித்து வருகின்றனர். அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. இதன் காரணமாக தற்போது உலகளவிலான கொரோனா பாதிப்பில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்தம் 3,43,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9,915 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனினும் வரும் நாட்களில் கொரோனாவின் பாதிப்பு மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். எனவே யாருக்கு வேண்டுமானாலும், கொரோனா தொற்று ஏற்படலாம்.. ஆனால் அதற்காக பதற்றப்பட வேண்டிய அவசியமில்லை.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை உட்கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனைகளை பின்பற்றினாலே எளிதில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிடலாம்.

சரி.. ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகும் பட்சத்தில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள் குறித்து தற்போது பார்க்கலாம். கொரோனா நோயாளிகளுக்கு பெரும்பாலும் வெந்நீரே கொடுக்கப்படும். எனவே பிளாஸ்டிக் பாட்டில்ளுக்கு பதில், மெட்டல் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்லலாம்.
மருத்துவமனையில் 3 வேளைக்கும் உணவு வழங்குவார்கள். ஆனால் இடைப்பட்ட நேரத்தில் பசி எடுக்கும் போது சாப்பிட பழங்களை எடுத்து செல்லலாம். அதிலும் குறிப்பாக நிறைந்த சிட்ரஸ் வகை பழங்களை கொண்டு செல்லாம். மேலும் பேரிச்சம்பழம், உலர் திராட்சை போன்றவற்றை கொண்டு செல்லலாம்.
சோப்பு, ஷாம்பு, பேஸ்ட், பிரஷ், டவல் ஆகியவற்றை மறக்காமல் எடுத்து செல்ல வேண்டும். ஏனெனில் அரசு மருத்துவனையில் இவற்றை வழங்கமாட்டார்கள். நோய்த்தொற்று தீவிரமடையாத நிலையில், சொந்த ஆடைகளை உடுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்படும். எனவே ஆடைகளை துவைக்க சோப்பை எடுத்து செல்லவும் மறக்க வேண்டாம். தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டால் மட்டுமே மருத்துமனை நிர்வாகம் சார்பில் ஆடை வழங்கப்படும்.

பொதுவாகவே செல்போன் என்பது மனிதனின் மூன்றாவது கையாக மாறிவிட்டது. கொரோனாவால் தனிமை சிகிச்சையில் இருக்க நேர்ந்தால், செல்போன் மட்டுமே துணை. எனவே செல்போன் சார்ஜரையும் அவசியம் எடுத்து செல்ல வேண்டும். புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருந்தால், உங்களுக்கு பிடித்த புத்தகங்களையும் கையோடு கொண்டு செல்லுங்கள்.. தனிமை, மன உளைச்சலில் இருந்து விடுபட்டு மன உறுதி இருந்தால், கொரோனாவை எளிதாக வென்று விடலாம்..