கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களிடம் இருந்து நோய் தொற்று பரவுவது மிக அரிது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு இயக்குனர் டெட்ராஸ் அதானம் கெப்ரியசஸ் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார். அப்போது பேசிய அவர் “ உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1,36,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஒரே நாள் பாதிப்பு எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சமாகும். நோய்த் தொற்று பரவத் தொடங்கி 6 மாதங்கள் ஆகி உள்ளது. ஆனால் நோய் பரவல் கட்டுக்குள் வரவில்லை. எனவே எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்துவது இது சரியான நேரமல்ல” என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் தொற்று நோய் நிபுணர் மரியா வான் கெர்கோவே பேசினார். அப்போது “ தென் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஒரு விரிவான அணுகுமுறை அவசியம். மேலும் பல நாடுகள், அறிகுறியற்ற நோயாளிகளை அடையாளம் கண்டுள்ளன. ஆனால் அறிகுறிகளற்றவர்களிடம் இருந்து வைரஸ் பரவுவதை யாரும் கண்டறியவில்லை. அது மிக அரிது” என்று தெரிவித்தார்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் அறிகுறி இல்லாமலே கொரோனா பரவி வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நோய்ப் பரவல் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில், கொரோனா அறிகுறிகள் இல்லாதவர்களிடம் இருந்து வைரஸ் பரவுவது மிக அரிது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.