கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நபரின் இறுதி சடங்கை நடத்த விடாமல் ஒரு கும்பல் தடுத்ததால், பாதி எரிந்த சடலத்துடன் குடும்பத்தினர் ஓடிய சம்பவம் ஜம்மு காஷ்மீரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்முவில் உள்ள டோடா மாவட்டத்தை சேர்ந்த 72 வயதான முதியவர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து டொமனா என்ற பகுதியில் உள்ள மைதானத்தில் அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கை மேற்கொண்டிருந்தனர். ஆனால் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கும்பல் ஒன்று இறுதி சடங்கை நடத்தக் கூடாது என்று உயிரழந்தவர்களின் குடும்பத்தினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனையடுத்து பாதி எரிந்த சடலத்தை எடுத்துக் கொண்டு குடும்பத்தினர் அங்கிருந்து சென்றுவிட்டனர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் தலையீட்டின் மூலம் அந்த சடலம் வேறு இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
உயிரிழந்தவரின் மகன் இதுகுறித்து பேசிய போது “ நாங்கள் வருவாய் அதிகாரி மற்றும் மருத்துவ குழுவுடன் சென்று இறுதி சடங்கை நடத்தினோம். டொமனா பகுதியில் உள்ள மைதானத்தில், அப்போது அங்கு கூட்டமாக வந்த உள்ளூர் மக்கள், இறுதி சடங்கை நடத்த விடாமல் தடுத்து நிறுத்தினர். எங்களது நெருங்கிய உறவினர் ஒருவரும் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்.

அப்போது அங்கிருந்தவர்கள், கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், பாதி எரிந்த உடலை எடுத்துக் கொண்டு எங்கள் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தின் போது பாதுகாப்பு அதிகாரிகள் எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் இறுதி சடங்கில் ஏற்கனவே நடந்த பிரச்சனைகளை கருத்தில் கொண்டு, அரசு முறையான திட்டத்தை கொண்டுவர வேண்டும்” என்று தெரிவித்தார்.