கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து 11 நாட்களுக்கு பிறகு நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவுவது இல்லை என்று சிங்கப்பூர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியின் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த ஆட்கொல்லி நோய் காரணமாக இதுவரை 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமா 3.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். நோய் பரவத் தொடங்கி, 5 மாதங்களை கடந்தும், பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.
எனினும் பல்வேறு உலகநாடுகள் கொரோனாவை தடுக்கும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கவும், நோய் தொற்றை பரவாமல் தடுக்கவும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கொரோனாவில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் உலகின் வளர்ந்து நாடுகளே தவித்து வருகின்றன.

இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் தடுப்பு மையம் மற்றும் மருத்துவ கல்வி மையம் இணைந்து நடத்திய ஆய்வில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களிடம் இருந்து 11 நாட்களுக்கு பிறகு, தொற்று வேறு யாருக்கும் புதிதாக பரவுவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை 11 நாட்களுக்கு பிறகு தனிமைப்படுத்துவது தேவையற்றது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 73 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவுகள் வெளிவந்துள்ளன.
இதன் மூலம், சிங்கப்பூரில் கொரோனா பாதித்தவர்களை, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்புவதில் அந்நாட்டின் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. அதாவது இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே வீட்டிற்கு அனுப்பும் முறை இருந்து வந்தது. இனி, அந்தமுறை 11 நாட்களுக்கு பிறகு என்று மாற்றப்படலாம் என்றும் தெரிகிறது.

சிங்கப்பூரில் இதுவரை சுமார் 32,000 பேர் கொரோனாவா பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 23 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 15,000-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.