உலகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகள், யோகா செய்வதன் மூலம் பயனடைகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு முதல், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், கோடை சங்காராந்தியுடன் தொடங்கும் யோகா தினம், இம்முறை முதன்முறையாக டிஜிட்டலுக்கு மாறியுள்ளது. “வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா” என்பது இந்த ஆண்டின் கருப்பொருளாகும். இந்நிலையில் இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் “ கோவிட் 19 நமது சுவாச மண்டலத்தை தாக்குகிறது. பிராணயாமம், நமது சுவாச மண்டலத்திற்கு வலுசேர்க்க உதவுகிறது. இதன் மூலம் நமது உடலி, நோய் எதிர்ப்பு சக்தி வளர்கிறது. பிராணயாமத்தில் பல்வேறு வடிவங்கள் உள்ளன. உலகம் முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகள், யோகா செய்வதன் மூலம் பயனடைகின்றனர். இது கடினமான காலங்களில் போராடி வெற்றிபெறுவதற்கான நம்பிக்கையை நமக்கு அளிக்கிறது. யோகா நமக்கு உடல் வலிமையையும் மன அமைதியையும் தருகிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக யோகா தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அவரின் பதிவில் “ யோகா என்பது உடல் மற்றும் மனம், சிந்தனை செயல்முறை மற்றும் வேலை, மனிதநேயம் மற்றும் இயல்பு ஆகியவற்றுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு வழியாகும்… இந்திய கலாச்சாரத்தின் ஒட்டுமொத்த விலைமதிப்பற்ற பரிசான யோகா, மோடியின் முயற்சியால் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.