வேலூரில் 2 வாரங்களில், கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகரித்ததால், அம்மாவட்ட ஆட்சியர் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிதீவிரமடைந்து வருகிறது. இதுவரை சுமார் 52,000 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 நாட்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் இன்று முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூரில் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு 10 மடங்கு உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2 வாரங்களுக்கு முன்பு அம்மாவட்டத்தில் வெறும் 48 பேருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 408-ஆக உயர்ந்துள்ளது. வேலூரில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதையடுத்து அம்மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, கடைகள் செயல்படும் நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன. திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் மட்டும் காலை 6 முதல் மாலை 6 மணி வரை இயங்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் எந்த கடைகளும் இயங்காது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இறைச்சிக்கடைகள் புதன் மற்றும் ஞாயிறு கிழமைகளில் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.