இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹீம் மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளியான தகவலை அவரது சகோதரர் மறுத்துள்ளார்.

இந்தியாவின் அதிகம் தேடப்படும் குற்றவாளியும், உலகளவில் பிரபலமடைந்த நிழலுலக தாதாவுமான தாவூத் இப்ராஹீம் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக உளவுத்துறை இன்று தெரிவித்தது. இதனையடுத்து தாவூத் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கராச்சியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியானது.

மேலும் அவரின் பாதுகாவலர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டது. இந்த தகவலை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்த நிலையில், மத்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் இது முழுக்க முழுக்க உண்மையான தகவல் என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த தகவலை தாவூத்தின் சகோதரர் அனீஸ் இப்ராஹீம் மறுத்துள்ளார். தாவூத் உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்கள் குடும்பத்தில் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். இதனிடையே கராச்சியில் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1993-ம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் தான் இந்த தாவூத் இப்ராஹீம். இவர் உலகத்திற்கு ஒரு நிழலுலக தாதாவாகவும் அறியப்படுபவர் ஆவார். நாட்டை விட்டு தப்பியோடிய குற்றவாளிகளில், இந்தியாவின் அதிகம் தேடப்படும் நபர் தாவூத் முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.