மாநிலங்களுக்கு இடையேயான பயணம் மேற்கொள்ளும் மக்களுக்காக, பொதுவான போக்குவரத்து கொள்ளை குறித்து ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு காரணமாக கடந்த திங்கள் கிழமை, தனது மாநில எல்லைகளை மூட டெல்லி அரசு உத்தரவிட்டது. இதேபோல் டெல்லியுடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் உத்தரப்பிரதேச மாநிலமும், அனைத்து எல்லைகளையும் மூடியது. ஆனால் அதே நேரத்தில், மத்திய அரசின் புதிய தளர்வுகள் காரணமாக, குர்கான், டெல்லி எல்லைகளை பகிர்ந்து கொள்ளும் ஹரியானா அரசு மீண்டும் எல்லைகளை திறந்தது.
இதனால் டெல்லி – குர்கான் எல்லையில் மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு ஹரியானா அரசு அனுமதி அளித்தும் கூட, இ பாஸை காண்பிக்குமாறு போக்குவரத்து அதிகாரிகள் கெடுபிடி காட்டுவதாக பயணிகள் குற்றம்சாட்டினர்.

மாநிலங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து இதுகுறித்து உரிய வழிமுறைகளை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற பொதுநல மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில அரசுகள் ஒரு வாரத்திற்குள் பொதுவான போக்குவரத்து கொள்கை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த 3 மாநில அரசுகளுடன், மத்திய அரசு ஆலோசனை நடத்தி பொதுப் போக்குவரத்து குறித்து முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தினர். மத்திய அரசு மற்றும் 3 மாநில அரசுகளும் ஒரே மாதிரியான கொள்கைகளையும், விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.