இந்திய ராணுவ வீரர்களின் வீரமரணம் குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவில், நேற்று முன் தினம் இரவு இந்திய இராணுவத்திற்கும் சீன வீரர்களுக்கும் இடையில் மிக மோசமான மோதல் நடைபெற்றது. இரு நாட்டு எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலில் இந்தியாவின் 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
சீனா தரப்பிலும் 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே இந்தியா – சீனா இடையே நீடித்து வந்த பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் நடைபெற்ற இந்த கொடூர தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே 20 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 வீரர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையே பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தினார். மேலும், முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதனைத்தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய வீரர்களின் உயிரிழப்பு குறித்து ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “ கால்வானில் தாக்குதலில், ராணுவ வீரர்களின் வீரமரணம், மிகுந்த மன உளைச்சலையும் வேதனையையும் தருகிறது. நமது வீரர்கள், முன்மாதிரியான தைரியத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தினர் மற்றும் இந்திய இராணுவத்தின் மிக உயர்ந்த மரபுகளில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்,
அவர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் தேசம் ஒருபோதும் மறக்காது. வீழ்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு என் எண்ணங்கள் இருக்கின்றன. இந்த கடினமான நேரத்தில் தேசம் அவர்களின் தோளோடு தோள் சேர்ர்ந்து துணை நிற்கிறது. இந்தியாவின் துணிச்சலான வீரர்களின் தைரியம் மற்றும் தைரியம் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.