டெல்லி முதலமைச்சருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று முன் தினம் முதல், உடல் நிலை பாதிக்கப்பட்டது. 51 வயதான அவருக்கு லேசான, காய்ச்சல், இருமல் இருப்பதால், அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
மேலும் அவரது அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பலரும், கெஜ்ரிவால் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது. கெஜ்ரிவால் நீரிழிவு நோயாளி என்பதால், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது ஆம் ஆத்மி தொண்டர்களிடம் கவலையை ஏற்படுத்தியது. தற்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்ற செய்தியால் அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.