உடல் நல பாதிப்பால் தன்னை தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ள டெல்லி முதல்வருக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நேற்று மதியம் முதல் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. 51 வயதான அவருக்கு லேசான, காய்ச்சல், இருமல் இருப்பதால், நாளை அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு சர்க்கரை நோய் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அவரது அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் பலரும், கெஜ்ரிவால் விரைவில் நலம் பெற வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக டெல்லியில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து நேற்று விளக்கமளித்த கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், டெல்லி வாசிகளுக்கென படுக்கை வசதி ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே கடந்த சில நாட்களாக டெல்லியில் தினமும் 1000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாவதால், இதுவரை அங்கு 27,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.