கொரோனா பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத் துறை அமைச்சரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதை தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின், கடந்த திங்கட்கிழமை இரவு, அதிக காய்ச்சல் மற்றும் மூச்சுத்திண்றல் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து கடந்த 16-ம் தேதி, அவருக்கு கொரோனா பரிசோதன மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கொரோனா ‘நெகட்டிவ்’ என்ற முடிவு வந்த நிலையில், 17-ம் தேதி அவருக்கு நடத்தப்பட்ட 2-வது பரிசோதனையில் அவருக்கு கொரோனா ‘பாசிட்டிவ்’ என்பது உறுதியானது.
இதனையடுத்து அவருக்கு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கொரோனவாவிற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சூழலில் சத்யேந்தரின் உடல்நிலை, இன்று மோசமடைந்ததை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட உள்ளது.

இதனிடையே சத்யேந்தர் ஜெயின் விரைவில் குணமடைய வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ கோவிட் 19 பெருந்தொற்றுடன் போராடும் டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த 14-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கலந்து கொண்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூடத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சத்யேந்தருடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தனிமைப்படுத்த டெல்லி அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.