கொரானா ஏற்படுத்தும் பொருளாதார தாக்கம் காரணமாக, வரும் மாதங்களில் வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என, ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நைட் பிராங்க் நிறுவனத்துடன் இணைந்து, ‘ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு சர்வேயர்ஸ்’ அமைப்பு நடத்திய ஆய்வில், எதிர்கால வேலைவாய்ப்பு பற்றிய உத்திரவாதம் இல்லாத சமூக பொருளாதார சூழலில், பலரும் சொந்த வீடு வாங்குவதை தள்ளிப்போடுவர் எனத் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வாடகை வீடுகளுக்கான தேவை அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரானா பாதிப்பு, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் சந்தை, உணர்வுகள் அடிப்படையில் செயல்படுவதாகவும், நிச்சயமற்ற வேலைவாய்ப்பு காரணமாக, மக்கள் மனநிலை உற்சாகமாக இல்லாத நிலையில், பலரும் வீடு வாங்கும் முடிவை நிலுவையில் வைத்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால், மும்பை உள்ளிட்ட நகரங்களில், வாடகைக்கு விடப்படாமல் காலியாக இருக்கும் வீடுகளும் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரச்சனைகள் காரணமாக வீட்டு உரிமையாளர்களில் பலர் வீட்டை வாடகைக்கு விட தயங்குவதாகவும் தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே, சென்னை போன்ற பெருநகரங்களில் இளைஞர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது குதிரை கொம்பாக உள்ள நிலையில் இந்த ஆய்வறிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.