
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் சமீப காலங்களாக கொரோனா தொற்று அதிகமாகிவருகிறது. இந்த நிலையில் தற்போது தேனி மாவட்ட ஆவின் சங்க தலைவரும், துணை முதல்வரின் சகோதரரான ஓ.ராஜாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. தற்போது கொரோனாவிற்கான எந்தவித அறிகுறியும் இல்லாத போது கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதால் மதுரை தனியார் மருத்துவமனையில் அமைந்துள்ள முகாமில் கண்காணிப்பில் உள்ளார்.

முதற்கட்டமாக ஓ.ராஜாவின் கார் ஓட்டுநர் மூலம் கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில், வேறு என்ன காரணமாகவே இருக்கும், எதன் மூலம் கொரோனா தொற்று பரவியிருக்க கூடும் என மாவட்ட நிர்வாகத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஓ.ராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், அடுத்ததாக அவருடன் தொடர்பில் இருக்கும் அவரது சகோதரரான துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும் கொரோனா பரிசோதனை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளதாக கூறப்படுகிறது.