பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுக்கிளி திரள் ஹரியானாவைத் தொடர்ந்து தற்போது டெல்லிக்குள் நுழைந்துள்ளன.

பயிர்களை அழிக்கும் பாலைவன வெட்டுகிளி திரள், இன்று காலை ஹரியானா மாநிலம் குருகிராமிற்குள் நுழைந்தன. அப்பகுதியை சேர்ந்த பலர் இதுதொடர்பாக பல வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான வெட்டுக்கிளிகள் பறக்கும் காட்சிகள் அந்த வீடியோக்களில் இடம்பெற்றுள்ளன.
இதுதொடர்பாக ஹரியானா மாநில அரசு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. குருகிராமை தொடர்ந்து டெல்லி புறநகர் பகுதிகளிலும் வெட்டுக்கிளி கூட்டம் நுழைந்துள்ளது. இதனையடுத்து டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், வெட்டுக்கிளிகள் குறித்து அவசர ஆலோசனைக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறித்தியுள்ளார்.
டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள ஜன்னல்களை மூடிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். முடிந்தால் பிளாஸ்டிக் கவர்களை செடிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தெற்கு, மேற்கு, தென்மேற்கு டெல்லி மாவட்ட நிர்வாகங்களுக்கு உச்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள நொய்டாவிற்கும் இதே எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் ஆப்பிரிக்காவில் இருந்து ஈரான், பாகிஸ்தான் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்த பாலைவன வெட்டுக்கிளிகள், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், குஜராத் போன்ற மாநிலங்களில் உள்ள பயிர்களை சேதப்படுத்தின. இந்த நிலையில் மீண்டும் இன்று வெட்டுக்கிளிகள் டெல்லியில் படையெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.