
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த விவகாரம் குறித்து பல தரப்பினரும் எதிர்ப்புகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழக காவல்துறையினை பற்றி பெருமையாக படம் எடுத்தது வேதனையாக உள்ளதாக இயக்குநர் ஹரி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் தமிழகத்தில் பெரும் எதிர்ப்புகளை கிளப்பி வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம், சிங்கம் 2, ‘சிங்கம் 3, சாமி ஸ்கொயர் என தமிழக காவல்துறையை மையமாக வைத்து பெருமையாக படம் எடுத்தவர் தான் இயக்குநர் ஹரி. ஆனால் கொரோனாவினால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், எந்த குற்றம் செய்யாத இருவரை அழைத்து சென்று போலீசார் தாக்கியது கண்டனத்திற்குரியது என இயக்குநர் ஹரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், சாத்தான்குளம் சம்பவம்போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது எனவும் அதற்கு ஒரேவழி சம்மந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே என தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படம் எடுத்ததற்காக இன்று மிகமிக வேதனைப்படுகிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.