
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சிகள் நடத்தினாலும், அதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் 82 ஆயிரத்து 725 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தினமும் ஆயிரம் பேருக்கு மேல் பாதிப்புகுள்ளாகி வரும் நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் 167 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் ஆரம்ப காலக்கட்டத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் காணப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தில், தற்போது பாதிப்பின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது.

எனவே இதனைக்கட்டுக்குள் வர முடிவெடுத்த மாவட்ட நிர்வாகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி திருமணம் போன்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளை யார் நடத்தினாலும், அதற்கு ஊரக, நகராட்சி, பேரூராட்சி அமைப்பு அதிகாரிகளிடம் அனுமதியினை அவசியம் பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். மேலும் இதுக்குறித்து முறையாக கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.