தமிழ்நாட்டில் அரிசி இருப்பு அதிகமாக உள்ளது என எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்பி வருவதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, ”தமிழ்நாட்டில் 17 லட்சம் டன் நெல் தேங்கியுள்ளது. அதை தரமான முறையில் அரைத்து தர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் இருக்கும் கடையை பிரித்து தரவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை செயல்படுத்த அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். 165 கடைகள் வாடகை கட்டடத்தில் இயங்குவதை மாற்றி அதற்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதே போல் பழுதடைந்த கட்டிடங்களை மழைக்காலத்திற்குள் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 46,410 குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 92.50 கோடி கிலோ அரிசி மனிதர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக இந்திய உணவுகழக அதிகாரிகள் கூறியுள்ளதாக உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கும்பகோணத்தில் 92,500 கிலோ அரிசி அதன் மதிப்பு 33 லட்சம் ருபாய். சேதமடைந்த அரிசி 5% மேல் இருக்கக் கூடாது. 0.2% கூடுதலாக சேதமடைந்துள்ளது என்பதால் பொதுமக்களுக்கு அனுப்பக் கூடாது என்பதற்கு பதிலாக மனித பயன்பாட்டிற்கு ஏற்றது அல்ல என்று கூறிவிட்டார்கள்.
இந்த அரிசியை வழங்கிய 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் தற்போதைய அரிசி இருப்பு 3 லட்சத்து 23 ஆயிரத்து 584 டன் தான் உள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி 9 லட்சம் டன் என்று கூறியுள்ளார். உண்மைக்கு புறம்பான செய்தியை எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கண்வலிக்கிழங்கிற்கு முறையான விலை கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்ய ஒன்றிய அரசிடம் கூறப்பட்டுள்ளது. திமுக-வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரிசிக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களை பாதிக்க கூடிய எந்த திட்டத்தையும் திமுக அரசு எதிர்க்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் தமிழ்நாடு முழுக்க 2 இடங்களில் மட்டும் தான் தவறு நடந்துள்ளது. அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 46 கோடி பொருட்களும் தரமாக தான் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.