சின்னவர் என்று என்னை அழைக்கச் சொல்லவில்லை என்றும், என்னை பெருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்த வேண்டாம் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிகழ்ச்சியில் ஒன்றில் பேசிய எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், “நான் மிகவும் ராசிக்காரன் என ஆர்.எஸ்.பாரதி கூறினார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்குகளை நான் கேட்டதால் வெற்றி இல்லை. கலைஞர், தளபதி, கட்சி தொண்டர்களால்தான் வெற்றி கிட்டியது. கழக மூத்த நிர்வாகிகள், முன்னோடிகளுக்கு மட்டுமே வெற்றி சேரும். இங்கு யாரும் யாருக்கும் அடிமையாக இருக்க வேண்டாம். அனைவரின் அன்புக்கும், வாழ்த்துக்கும் நான் தான் அடிமை. நான் யாரையும் சின்னவர் என்று அழைக்க சொல்லவில்லை. இருக்கிற பிரச்சனைகள் போதாதா? என் மீதுள்ள அன்பால் மூன்றாம் கலைஞர் என என்னை அழைக்கின்றனர்.
என்னை பொருமைப்படுத்துவதாக நினைத்து கலைஞரை சிறுமைப்படுத்துகின்றனர். கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டுமே. ஒரே கலைஞர் தான். உங்கள் வயது, அனுபவம் ஆகியவற்றிக்கு நான் சின்னவன். யாரையும் நான் என்னை சின்னவர் என்று கூப்பிடச் சொல்லவில்லை. மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செல்லும் வழியெல்லாம் மக்கள் சிரித்த முகத்தோடு அழைக்கின்றனர். அந்தளவிற்கு தமிழகத்தில் ஒரு ஆட்சியை தலைவர் கொடுத்திருக்கிறார். இளைஞர் அணிச் செயலாளராக 3 ஆண்டுகள் முடித்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறேன். இன்னும் பயணம் செய்ய வேண்டிய தூரம் மிக மிக அதிகம். பெரியார், அண்ணா ஆகியோரை நான் நேரில் பார்த்தது கிடையாது. நான் பார்த்ததெல்லாம் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், தளபதியை தான்.
இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நன்கொடை வாங்கி 3 ஆண்டுகளில் மட்டும் ரூ. 10 கோடி வசூல் செய்து இளைஞரணி அறக்கட்டளையில் சேமித்து இளைஞரணியில் உள்ளவர்களுக்கும், மூத்த முன்னோடிகளுக்கும் பயன்பெறும் வகையில் செய்து வருகிறோம். கட்சி முன்னோடிகளுக்கு ஏதாவது உதவி தேவை என்றால் இளைஞர் அணி அலுவலகத்திற்கு கடிதம் எழுதினால் உதவி செய்யப்படும் இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். முன்னதாக, திமுக தொண்டர்கள் கோஷம்போடும்போது தன்னை மூன்றாம் கலைஞர், இளம் தலைவர் என்று அழைப்பதில் தனக்கு துளிகூட விருப்பமில்லை, சின்னவர் என்று அழைக்கிறார்கள். அதனால், சின்னவர் என்றே அழையுங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தாக செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில், இவ்வாறு அவர் தெரிவித்தார்.