காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடியை வயது காரணமாக பிரித்து வைத்ததால், மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத், சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் தாசன். இவரது மகன் விஜய் (வயது 17). தாசன் பனைமரம் ஏறும் தொழில் செய்து வருகிறார். இதே ஊரில் வசித்து வருபவர் சுடலைமணி. இவரின் மகள் மேகலா (வயது 16). இருவரும் உறவினர்கள் என்பதால் விஜய்க்கும், மேகலாவுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து குடும்பம் நடத்த தொடங்கியுள்ளனர். மகளை காணவில்லை என்பதால், மேகலாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், வழக்குப்பதிவு செய்து சிறுவன் விஜயை கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, மேகலாவை அவரின் பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைக்க, சிறையில் இருந்து ஜாமீனில் வந்த விஜய் மீண்டும் மேகலாவிடம் பேசியுள்ளார். இதனை அறிந்த பெற்றோர் கண்டித்துள்ளார். இதனால், விரக்தியடைந்த இருவரும் வீட்டில் இருந்து நேற்றிரவு தலைமறைவாகினர். இந்நிலையில், இன்று காலை இருவரும் சின்னமாடன்குடியிருப்பு குளக்கரையில் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். இதையடுத்து, தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.