வேளச்சேரியில் திருமணமான ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வேளச்சேரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் இந்துமதி. இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் தி.நகரைச் சேர்ந்த குமரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு புகுந்த வீட்டிற்கு வந்த இந்துமதியை குமரனின் தாயார் ராசி இல்லாதவள், அதிகம் படிக்கவில்லை என்று திட்டிக் கொண்டே இருந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் வரதட்சணை கேட்டு இந்துமதியை கொடுமை செய்ததாகவும் சொல்லப்படுகிறது. மாமியாரின் தொடர் தொல்லையால் விரக்தி அடைந்த இந்துமதி, வேளச்சேரியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
திருமணம் ஆகிய ஐந்தே மாதங்களில் 4 மாத கர்ப்பிணி ஆக இந்துமதி வீட்டுக்கு வந்தது அவர்களது குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. கணவன் தன்னை சமாதானம் செய்து அழைத்துச் செல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்த இந்துமதிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், விரக்தியடைந்த இந்துமதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்வதற்கு முன் தனது அக்காவுக்கு வாட்ஸ் அப்பில் ‘தன் சாவுக்கு குமரனின் அம்மா தான் காரணம், நானும் பாப்பாவும் செல்கிறோம்’ என்று ஆடியோ பதிவு ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வேளச்சேரி போலீசார் இந்துமதியின் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திருமணமாகி ஐந்து மாதத்தில் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததால் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.