ஆசிரியைகளை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டி வைத்த 3 மாணவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
சென்னையை அடுத்த திருவொற்றியூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பிளஸ் 2 பயிலும் 3 மாணவர்கள் பள்ளியில் தொடர்ந்து அராஜக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். பிற மாணவர்களை தாக்குவது, ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுப்பது, மாணவிகளை கிண்டல் செய்வது என ஒழுங்கீன செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த மாணவர்கள் மீது பல ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் தொடர்ந்து புகார் அளித்துள்ளனர். இதனால், தலைமை ஆசிரியர் அந்த மாணவர்களை அழைத்து பலமுறை எச்சரிக்கை விடுத்திருக்கிறார். எனினும், அதனை கண்டுகொள்ளாத அந்த 3 மாணவர்கள், தொடர்ந்து பள்ளியில் அட்டூழியம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று காலையில் பள்ளி தொடங்கிய சில நேரத்தில் கழிப்பறை கதவுகள் நீண்டநேரமாக தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து, மாணவர்களும், ஆசிரியர்களும் கழிப்பறை இருக்கும் இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது சில ஆசிரியைகளை பாத்ரூமுக்குள் வைத்து பூட்டிவிட்டு இந்த 3 மாணவர்களும் வெளியே நின்று கொண்டிருந்தனர். பாத்ரூம் கதவுகளை திறக்க முயன்ற பிற ஆசிரியர்களுக்கு அந்த மாணவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மாணவர்களின் அராஜகம் கட்டுப்பாடின்றி செல்வதை உணர்ந்த தலைமை ஆசிரியர், இதுகுறித்து திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீசார், பாத்ரூமுக்குள் பூட்டப்பட்டிருந்த ஆசிரியைகளை விடுவித்தனர். மேலும், போலீஸாரை பார்த்து தப்பியோட முயன்ற 3 மாணவர்களையும் காவலர்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர், அந்த மாணவர்களை சிறார் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர்.