அரசுப் பள்ளியில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியில், 8 மாணவிகள் தாங்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து புகார் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதி பகுதியைச் சேர்ந்தவர் 10 வயது சிறுமி. இவர், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது அந்த சிறுமி, தங்கள் பகுதியைச் சேர்ந்த 16 வயது வாலிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர்களிடம் தெரிவித்தார். கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் வீட்டுக்கு வந்த அந்த சிறுவன், தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக மாணவி தெரிவித்தார்.

அப்போது, மேலும் 7 மாணவிகள் எழுந்து தங்களுக்கும் அந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், உடனடியாக காரமடை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, தற்போது அந்த இளைஞர் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவனை பிடித்து விசாரித்து வருகின்றனர். வாலிபர் ஒருவர் 8 மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்த சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.