ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணி நீக்க செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து வகையான பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மத்திய அரசு , மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதன் படி தமிழ்நாட்டில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு 2 தாள்களைக் கொண்டு நடத்தப்பட்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியர்களாக 2ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.
இச்சட்டத்தை மத்திய அரசு 2009ல் அறிமுகம் செய்தாலும் தமிழகத்தில் 2011ல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதையடுத்து புதியதாக ஆசிரியர் பணியில் சேர்பவர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஏற்கனவே பணியில் இருப்பவர்கள் டெட் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும் இதற்காக ஏற்கனவே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மீண்டும் டெட் தேர்வெழுத அவகாசம் தரப்பட்டது.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. எனினும் நீதிமன்றங்கள் சிறுபான்மையின பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் டெட் தேர்வில் இருந்து விலக்கு அளித்தது. காலக்கெடு பல முறை நீட்டிக்கப்பட்ட நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1747ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளார்கள் . இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் காகர்லா உஷா கூறுகையில் , அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதனால் அவர்களை தொடர்ந்து பணியில் வைத்திருக்க முடியாது. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது அவர்களைப் பணி நீக்கம் செய்யப்படுவது குறித்து ஆலோசனை செய்யப்படும் என தெரிவித்தார்.