திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரானா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வந்தார். இந்நிலையில், உடல்நலக் குறைவால் இரண்டு நாட்களாக தனிமைப்படுத்திக் கொண்ட அவருக்கு நேற்று முன்தினம் கொரானா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதையடுத்து, மூச்சுத்திணறலோடு குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் இருப்பதால், மருத்ததுவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் வைக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில் மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அன்பழகனுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பதன் விவரம் அடங்கியுள்ளது. அதில், தற்போது சூழலில் 80% ஆக்சிஜன் வெண்டிலேட்டர் மூலமே கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து அவரை மருத்துவர்கள் கணிகாணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 80% ஆக்சிஜன் வென்டிலேட்டர் மூலமே சுவாசிப்பது அவரது உடல்நிலை மோசமாக இருப்பதையே காட்டுகிறது. கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.