திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகனுக்கு கொரானா தொற்று உறுதியானதை அடுத்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரானா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இதுவரை இல்லாத அளவாக இன்று ஒரே நாளில்,1,286 பேருக்கு நோய்த்தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதன்முறையாக எம்எல்ஏ ஒருவருக்கு கொரானா உறுதியாகி உள்ளது. சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆன ஜெ.அன்பழகனுக்கு(61) கொரானா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து அவர், குரோம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூச்சுத்திணறலோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்பழகனுக்கு, வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் இருப்பதால், டாக்டர்களில் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு காலத்தில் அவர் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.