சிறையில் உயிரிழந்த தந்தை மகன் விவகாரம் குறித்து, தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன் என்று திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊரடங்கை மீறி கடையை திறந்து வைத்ததற்காக சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறை விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டனர். கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும், மர்ம முறையில் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
போலீசாரின் கொடூர தாக்குதல் காரணமாகவே, இருவரும் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து திமுக எம்.பி கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பதிவில் “சாத்தான்குளத்தில் காவல்துறை விசாரணையின்போது இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்காதது ஏன்? உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு இழப்பீடாக தமிழக அரசு சார்பில் நிதியுதவியும், அரசு வேலையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.